2011 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். மற்றும் இதர ஏ மற்றும் பி குரூப்பை சேர்ந்த மத்திய பணிகளுக்கான தேர்வு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 21 வயதிற்கு மேல், அதேசமயம் 30 வயதிற்குள் உள்ள பட்டதாரிகள் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதேசமயம் ஓ.பி.சி. பட்டியலை சேர்ந்த மாணவர்களுக்கு 3 வருடங்களும், எஸ்.சி/எஸ்.டி. பட்டியலை சேர்ந்த மாணவர்களுக்கு 5 வருடங்களும் விலக்கு அளிக்கப்படும். பொது பிரிவை சேர்ந்த மாணவர்கள் அதிகபட்சமாக 4 முறையும், மாற்று திறனாளி மாணவர்கள் 7 முறையும், ஓ.பி.சி. மாணவர்கள் 7 முறையும், எஸ்.சி/எஸ்.டி. பிரிவு மாணவர்கள் 35 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதலாம்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆன்லைன் மற்றும் சாதாரண முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தலைமை தபால் நிலையம் மற்றும் முக்கிய தபால் நிலையங்களில் கிடைக்கும். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.30. ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள் www.upsconline.nic.in என்ற வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கும்படி அனைவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பம் செய்பவர்கள் ரூ.50 ம், சாதாரண முறையில் விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 ம் கட்டணமாக செலுத்த வேண்டும். அதேசமயம் எஸ்.சி/எஸ்.டி/ மாற்று திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் 21 ம் தேதி, இரவு 11.59 மணிக்குள் கிடைக்க வேண்டும். அதன்பிறகு அந்த தளத்தின் இணைப்பு முடக்கப்பட்டு விடும். எனவே ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்காக காத்திராமல், முதலிலேயே விண்ணப்பித்து விடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தபால் மூலமோ அல்லது நேரடியாக சென்றோ சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் அதே மார்ச் 21 அல்லது அதற்கு முன்பாக சென்றுவிட வேண்டும். அதேசமயம் வெளிநாடு மற்றும் இந்தியாவின் குறிப்பிட்ட தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்கள் தபால் அல்லது விரைவு தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 28 வரை அனுமதி உண்டு.(ஆனால் கொரியர் மூலமாகவோ அல்லது நேரடியாக தரவோ அனுமதியில்லை)
விண்ணப்பம் அல்லது தகுதி பெறுதல் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் 011-23385271 /23381125/23098543 என்ற எண்களில் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம். இந்த சிவில் சர்வீஸ் தேர்வு சம்பந்தமாக எழும் அனைத்து சந்தேகங்களுக்கும் விடை காண www.upsc.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தவும்.