Translate

குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி பெறுவது எப்படி?


குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், ‘குடும்பத்தில் முதல் பட்டதாரி’ என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என, ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வரும் 2010-11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும். கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும். கவுன்சிலிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும். சான்றிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர்/அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

‘குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை’ என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப் படும். உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

40 சதவீதம் பேர் பயனடைவர்: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப் பங்களில், மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியா என்ற விவரமும் கேட்கப்பட்டது. அதன்படி, 40 சதவீத மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலிலும் 40 சதவீத மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. இதர தொழிற்கல்வி படிப்புகளிலும் இதே நிலையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேருபவர்களில் 40 சதவீதம் பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பர் என்றும், தமிழக அரசின் இச்சலுகை மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற விவரம் ஆவணங்களுடன் கேட்கப்படுவதால், இந்த எண்ணிக்கை சற்று குறையவும் வாய்ப்புள்ளது.

படிவங்களை இணைத்துள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் படிவங்களை கவுன்சலிங்குக்குச் செல்லும்போதே ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக் கையேடு சொல்கிறது.


படிவத்தை தரவிறக்க கீழே சொடுக்கவும்
Downloads: