ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பிற்கும், அதற்கான உழைப்பிற்கும் தகுந்த வருமானத்தை தேடிக்கொள்ள முயல்வதில் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. பொருளாதார ரீதியில் ஒரு படைப்பாளியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் பதிப்புரிமைச் சட்டம். பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பின் மீது ஏகபோக உரிமை வழங்கப்படுகிறது.
ஒரு படைப்பாளிக்கு வழங்கப்படும் பதிப்புரிமை என்பது பல உரிமைகளின் தொகுப்பு ஆகும். ஒரு படைப்பாளி எழுத்தாளராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு கிடைக்கும் உரிமைகள் கீழ்கண்டவாறு.
- தான் உருவாக்கிய படைப்பை பிரதி அல்லது நகல் எடுக்கும் உரிமை
- மின்னணு இயந்திரங்களில் சேமிக்கும் உரிமை
- மக்களிடம் வெளியிடும் உரிமை
- பொது இடங்களில் நிகழ்த்திக் காட்டும் உரிமை
- திரைப்படமாக்கும் அல்லது ஒளிப்பதிவு செய்யும் உரிமை
- மொழிப்பெயர்ப்பு செய்யும் உரிமை
- வேறோர் படைப்பாக மாற்றும் உரிமை
அதே சமயம் ஒரு படைப்பாளிக்கு கால வரையற்ற, வரைமுறை இல்லாத ஏகபோக உரிமை வழங்கப்பட்டால், அது எதிர்வினையை ஏற்படுத்தும். அது பதிப்புரிமையின் அடிப்படை சட்ட விதிக்கு எதிரானதாக அமைந்துவிடும். உதாரணத்துக்கு, ஒரு படைப்பாளிக்கு வழங்கப்பட்ட ஏகபோக உரிமையை பயன்படுத்தி அவர் தன் படைப்பை தழுவி மற்றவரால் உருவாக்கப்பட்ட வேறோர் படைப்பைத் தடுத்து விடமுடியும். இந்த எதிர்வினையை தடுக்கும் பொருட்டு ஒரு படைப்பாளிக்கு அரசாங்கத்தில் வழங்கப்படும் ஏகபோக உரிமைக்கு கால நிர்ணயம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு படைப்பிற்கான காலவரையானது அந்த படைப்பாளரின் ஆயுட்காலம் முடிந்து அதன் பின்னர் 60 வருடங்களாகும். ஒரு படைப்புக்கான பதிப்புரிமை காலம் முடிந்த பிறகு அந்தப் படைப்பு பொது பயன்பாட்டுக்கு வந்துவிடும். பொது பயன்பாட்டுக்கு வந்த பிறகு ஒரு படைப்பை நாம் ஆசை தீர எவ்வளவு வேண்டுமானாலும் நகல்கள் எடுத்துக் கொள்ளலாம். நம்மை சட்டம் தண்டிக்க முடியாது.
காலவரையரையைத் தவிர ஒரு படைப்பாளிக்கு வழங்கப்படும் உரிமைகளில் பல விதிவிலக்குகள் உள்ளன. அவற்றை ஆங்கிலத்தில் Fair Use Doctrine – நியாயமான பயன்பாட்டு கோட்பாடு என்று அழைக்கிறோம். படைப்பாளியின் ஏகபோக உரிமையையும் பொதுமக்களின் நலனையும் சரிசமன் செய்யும் பொருட்டு கொண்டுவரப்பட்டதுதான் இந்த நியாயமான பயன்பாட்டு கோட்பாடு. ஒரு படைப்பை பயன்படுத்துபவர் மேலே குறிப்பிட்ட கோட்பாட்டின் விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டாரேயானால் அவர் சட்டப்படி எந்த தவறும் இழைத்தவராக மாட்டார். இதற்கான விதி பதிப்புரிமைச் சட்டத்தின் 52 வது பிரிவில் உள்ளது.
மேற்சொன்ன கோட்பாட்டின்படி மாணவர்கள் கல்வி பயிலும் பொழுதோ அல்லது, ஆய்வு செய்யும் பொழுதோ தங்களுடைய சொந்தப் பயன்பாட்டுக்காக மட்டும் ஒரு புத்தகத்தின் தேவையான சில பக்கங்களையோ அல்லது சில பகுதிகளையோ மட்டும் நகல் எடுத்துக்கொள்ளலாம், அதில் தவறில்லை. அவ்வாறு செய்யும் பொழுது, நகல் எடுத்து தருபவரும் தீங்கு இழைத்தவராக கருதப்பட மாட்டார். இதை விடுத்து லாப நோக்கிற்காகவோ அல்லது வர்த்தக ரீதியாகவோ பதிப்புரிமை பெற்ற ஒரு புத்தகத்திலிருந்து நகல்கள் எடுத்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.