Translate

“வெஸ்டர்ன் டாய்லெட்’டை பயன்படுத்துவது எப்படி?



“வெஸ்டர்ன் டாய்லெட்’டில், மூன்று பகுதிகள் உண்டு.
கோப்பை, வளையம், தட்டு (மூடி).

சிறுநீர் மட்டும் கழிப்பவர்கள்,வளையம் மற்றும் தட்டு இரண்டையும் தூக்கிவிட்டுத் தான் சிறுநீர் கழிக்க வேண்டும்.மூடியை மட்டும் தூக்கி சிறுநீர் கழித்தால் அடுத்து வருபவர் மலங்கழிக்க வளையத்தின் மேல் உட்காரும் போது, முந்தையவரின் சிதறிய சிறுநீர், பின்னவரின் உடலில் பட ஏதுவாகிறது.

மலம் கழிப்பவர்கள், தட்டை மட்டும் தூக்கி,வளையத்தின் மேல் அமர வேண்டும் என்பது பலரும் அறிந்ததே.முதலில், “ப்ளஷ்’ செய்துவிட்டு,மலம் சென்ற பின்,இறுதியில், மீண்டும், “ப்ளஷ்’ செய்ய வேண்டும்.கோப்பை, எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்.கோப்பையில் உள்ள நீரில்,மலத் துகள்கள் மிதந்து கொண்டிருக்கக் கூடாது.

“ப்ளஷ்’ செய்த பின்னும் மலத் துகள்கள் மிதந்து கொண்டிருந்தால்,வாளியில் தண்ணீர் எடுத்து வேகமாக ஊற்றினால்,எல்லா கசடுகளும் உள்ளே தள்ளப்பட்டு,தேங்கி இருக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கும்.

கோப்பைக்கு வலது பக்கத்தில்,“ஹாண்ட் ஷவர்’ இருக்குமாறு அமைப்பது நலம்.டிஷ்யூ பேப்பரின் உபயோகத்தை நாம் எள்ளி நகையாடுகிறோம்.மலம் கழித்தபின், “டிஷ்யூ’ பேப்பரில் துடைத்து விட்டு, தண்ணீர் விட்டு கழுவினால், கை அதிகமாக மாசுபடுதல் தவிர்க்கப்பட்டு, தண்ணீர் செலவும், நோய்க் கிருமிகள் பரவுதலும் தடுக்கப்படுகிறது.
அது எத்தனை சுலபமானது, சுகாதாரமானது, வசதியானது என்பதை உபயோகப்படுத்திப் பார்த்தால் தான் புரியும். ‘டிஷ்யூ பேப்பரும்,’ அதன், “ஹோல்டரும்,’ கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பது அவசியம்.

தினமும் காலையும், இரவும், “ஹேண்ட் ஷவரைக்’ கொண்டு, தட்டின் அடிப்பாகத்தையும், வளையத்தின் அடிப்பாகத்தையும் சுத்தம் செய்தால், ஏதேனும் பூச்சிகள் ஒளிந்திருந்தாலும், கண்டு அகற்றி விடலாம்.

மலச்சிக்கல், ஹெர்னியா இருப்பவர்கள், “வெஸ்டர்ன் டாய்லெட்’டை உபயோகிக்காமல் இருப்பது நலம். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முடக்குவாதம், மூட்டு வலி இருப்பவர்களுக்கு, “வெஸ்டர்ன் டாய்லெட்’ ஒரு வரப்பிரசாதம். சிறு வயதிலிருந்தே சாதாரண கழிப்பறையை உபயோகிப்பவர்களுக்கு, முழங்கால் வலி ஏற்படுவது குறைவு என மருத்துவ ஆய்வு கூறுகிறது!