Translate

பொங்கல் பண்டிகை - ஏன்? எப்படி?


காவிரிபூம்பட்டினத்தில் இந்த விழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இந்த விழா இப்போது தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற மூன்று நாட்களே நடக்கிறது. அந்தக் காலத்தில் 28 நாட்கள் நடந்துள்ளதற்கான சான்று இருக்கிறது. அகத்திய முனிவர் இந்திரனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவன் பூம்புகாருக்கு வந்ததாகவும் தகவல் உண்டு. முதன்முதலாக இந்திரவிழா நடத்திய போது, அதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முரசறைந்து பொது அறிவிப்பாக அறிவித்தனர்.இப்போது பொங்கலுக்கு ஊரையும், வீட்டையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்வது போல, அப்போதும் நடந்துள்ளது. வீதிகளிலும், கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன. பொன்னால் ஆன பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது.

பாக்கு, வாழை மரத்தோரணங்கள் கட்டப்பட்டன. அன்றையச் செல்வச் செழிப்பிற்கேற்ப தங்கத்தூண்களில் முத்துமாலைகள் தொங்க விடப்பட்டன. நகர வீதிகளிலுள்ள பழைய மணலை மாற்றி புதுமணல் பரப்பினர். கொடிகள் கட்டப்பட்டன. காவல் தெய்வங்கள் முதல் சிவன் கோயில்கள் வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.இதையெல்லாம் விட உயர்ந்த ஒரு தர்மம் இந்த விழாவை ஒட்டி பின்பற்றப்பட்டது. ஒருவருக்கு யாரேனும் பகைவர்கள் இருந்தால், அவர்களை விட்டு விலகிச் சென்று விட வற்புறுத்தப்பட்டது. ஒரு நல்ல நாளில், தேவையற்ற சண்டைகள் வேண்டாமே என்பதற்காக இவ்வாறு அரசு சார்பிலேயே அறிக்கை விடப்பட்டது. இவ்விழா நாளில் பகைமை, பசி, நோய் நீங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.

போகி பண்டிகை


"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. மழைக்குரிய தெய்வம் இந்திரன். அவனை வழிபட்டால், மாதம் மும்மாரி பெய்து பயிர் பச்சை செழிக்கும் என மக்கள் நம்பினர். பிற்காலத்தில், சூரியனைப் பற்றிய அறிவு மக்களுக்கு வந்தவுடன், சூரியனே சீதோஷ்ணத்தை நிர்ணயிப்பவர் என்ற நம்பிக்கை வந்து, தங்கள் கண் முன் காட்சி தரும் அந்த கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். தங்கள் விளைச்சலுக்கு காரணம் அவரே என நம்பினர். பூமியில் இருக்கும் நீரை ஆவியாக்கி மேலே கொண்டு சென்று, ஒன்றுக்கு பத்தாக மழை பெய்விப்பவர் என்ற ரீதியில் இந்த நன்றியறிதல் தெரிவிக்கப்பட்டது.

தாங்கள் அறுவடை செய்த புதுநெல்லை தை முதல்நாளில் சமைத்ததால், இந்திர விழா என்ற பெயர் பொங்கல் என மாறியது.எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன்.மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம்.அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.

பொங்கல் பண்டிகை


ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள்.

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்
கொள்கிறார்கள். புத்தாடையில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனைமுறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழிஅனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தான். இப்படி மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில்" மஞ்சள் கீறுதல் ' என்னும் சடங்காகச் செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.

பொங்கலுக்கு பச்சரிசியை பயன்படுத்துவதன் காரணம் தெரியுமா? பச்சரிசியைப் போல நாம் இன்று பக்குவமில்லாத நிலையில் இருக்கிறோம். பச்சரிசியை பொங்கியதும் சாப்பிடும் பக்குவநிலைக்கு வருகிறது. அதுபோல், நாமும் மனம் என்னும் அடுப்பில் இறைசிந்தனை என்னும் நெருப்பேற்றி படரவிட்டு, ஆண்டவன் விரும்பும் பிரசாதமாக்க வேண்டும். அரிசியுடன் வெல்லம், நெய்,வாசனைதரும் ஏலம்,முந்திரி,உலர்திராட்சை சேர்ந்து வேக வைக்க சுவை மிகுந்த சர்க்கரைப் பொங்கல் தயாராகிறது. பச்சரிசி போல, உலகியல் ஆசை என்னும் ஈரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் பக்குவமில்லாமல் இருக்கிறோம். ஆனால் அன்பு, அருள், சாந்தம், கருணை போன்ற நல்ல குணங்களான வெல்லம்,நெய்,ஏலம், முந்திரி போன்றவற்றை நம்மோடு சேர்த்துக்கொண்டு பக்தி என்னும் பானையில் ஏற்றி, ஞானம் என்ற நெருப்பில் நம்மை கரைத்துக் கொண்டால் பக்குவம் உண்டாகி "பொங்கல்' போல் அருட்பிரசாதமாகி விடுவோம். பொங்கலை இறைவன் உவந்து ஏற்றுக்கொள்வது போல, பக்குவப்பட்ட நம்மையும் ஏற்றுக்கொள்வான்.

பொங்கலில் முக்கிய இடம் பெறுவது கரும்பு. இது இனிமையின் அடையாளம். கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு தித்திப்பாய் இனிக்கும். இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், அதன் முடிவில் கரும்புபோல இனிமையைத் தந்திடும். கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுக்களும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம். அதனாலேயே மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம்.

பொங்கல் விழாவில் பனங்கிழங்கு, சிறு கிழங்கு, சேனை, பூசணி ஆகியவை பிரதானம் பெறுகின்றன. திருமணம் முடித்த தம்பதியருக்கு கொடுக்கும் பொங்கல் சீர்வரிசையில் இவை நிச்சயம் இடம் பிடிக்கும். இதற்கு காரணம் தெரியுமா?சீர்வரிசையில் கொடுக்கும் கிழங்குகள் அனைத்தும் மண்ணிற்கு அடியில் விளையக்கூடியவை. மண் எத்தகைய தன்மையுடையதாக இருந்தாலும், அதை தனது இருப்பிடமாக எடுத்துக்கொண்டு, அங்குள்ள நீர் வளத்தைப் பயன்படுத்தி விளைந்து விடும். இதைப்போலவே, மணப்பெண்ணும் தனது கணவன் வீட்டிலுள்ளவர்கள் எத்தகைய குணம் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

அதையே தன்னையும், புகுந்த வீட்டையும் வளப்படுத்துவதற்குரிய இடமாக ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்பட வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே சீர்வரிசையில் கிழங்கு வகையை கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் உருளை, மரச்சீனி, சீனிக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் கொடுக்கும் வழக்கம் உள்ளது.

பொங்கலும் பஞ்சபூத வழிபாடும் : பொங்கல் திருவிழாவை பஞ்சபூத வழிபாட்டுக்குஉரிய நாளாகக் கொள்ளலாம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே பஞ்சபூதங்கள். தற்போது வரை கிராமங்களில் மண்பானையிலேயே பொங்கலிடுகின்றனர். இந்தப் பானை பூமியில் இருந்து களிமண்ணால் செய்யப்படுகிறது. பானையில் நீர் விட்டு, பனை ஓலை மூலம் நெருப்பு வைத்து அரிசியைக் கொதிக்க வைக்கிறோம். நெருப்பு எரிவதற்கு காரணமாக காற்று இருக்கிறது. வெட்ட வெளியில் பொங்கல் வைப்பதன் மூலம் ஆகாயத்தை பார்க்கிறோம். பொங்கல் வைக்கும் புகையும் வளிமண்டலத்துக்கு நன்மையையே செய்கிறது. இதன்படி பஞ்சபூதங்களை வழிபடும் வைபவமாக பொங்கல் அமைந்துள்ளது.

மாட்டுப் பொங்கல்


கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன.மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, "வீர நடை' நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு "அங்க வஸ்திரம்' போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே!

காணும்பொங்கல்


தமிழ்க் கனிகளான முக்கனிகளோடு பல்வேறு கனிகளையும், மலர்களையும் ஒரே இடத்தில், கண்டு தரிசித்தால் அந்த ஆண்டு முழுவதும் உவகை பொங்கும்என்ற நோக்கில்தான் காணும் பண்டிகை அதாவது கனி காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வந்தது.பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "கனு' பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
"காணும் பொங்கலும்' இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது.